அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! நன்றி! ...

25 November, 2010

Blood Diamond ஆப்ரிக்கன் வைரங்களின் குரூர பக்கம்

 மால்கம்-x  னு ஒரு புத்தகம் அதன் முதல் அத்தியாயமே  ஆப்பிரிகாவிலிருந்து சுமார் 400 வருடங்களுக்கு முன்பு கப்பலில் அமெரிக்காவுக்கு அடிமையாக பிடித்து வரப்படும் கருப்பு மனிதர்களில் சோக பக்கங்களில் இருந்துதான் ஆரம்பம் ஆகும்.

   
              அதனை தமிழில் மொழி பெயர்த்த ஆசிரியர் மு.குலாம் முஹம்மத் அவர்கள் இப்படி குறிப்பிட்டு இருப்பார் சில சரக்குகள் அழுகிப்போய் உள்ளது என்ன செய்யலாம் என கப்பல் கேப்டனிடம் கேட்கப்படும் அவன் இப்படி சொல்லுவான் அழுகிய சரக்குகளை கடலில் வீசிவிடுங்கள் ஏன் என்றால் அவை மற்ற சரக்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவன் சரக்கு என்று குறிப்பிட்டு சொல்லுவது கப்பலில் தோற்று நோய் ஏற்பட்டு உடல்நிலை மோசமான கருப்பு மனிதர்களை.கருப்பு மனிதர்கள் வியாபார பொருளாக பார்க்கப்பட்டு அவர்களின் உழைப்பை உறிஞ்சிய மேலை நாடுகளை வரலாறு தன் கருப்பு பக்கங்களில் பதுக்கி கொண்டது.உலகம் தோன்றிய காலங்களிலிருந்து இவர்கள் அடிபடுட்க்கொண்டுதான் இருக்கிறார்களோ என்ற ஒரு மிகப்பெரிய கேள்வி என்னுள் உண்டு.



     சரி இப்போதைய காலகட்டத்திற்கு 
வருவோம் ஆப்ரிக்க கண்டத்தில் இருக்கும் வளங்களை சுரண்டுவதற்காக மேற்குலகம்
தந்த பட்டினிச்சாவு,  ஏழ்மை, தொற்று நோய்கள், தீவிரவாதம்,வெடிகுண்டு கலாச்சாரம், அச்சுறுத்தல்கள் என பலவும் இருக்க மேற்கத்திய நாடுகளில் இருக்கும் மருந்து கம்பெனிகள், ஆப்ரிக்க குடிமக்களை ஆராய்ச்சிகாக பயன்படுத்துகிறது என்பதையும், AID என்று சொல்லப்படும் உதவி என்கிற போர்வையில் உள்ளீடாக நடத்தப்படும் மருத்துவ ஆராய்ச்சிகள், மருந்துகளை சோதிக்கும் களமாக மாற்றி , கிருமிகளை அவர்களுள் பரப்பும் அயோக்கியத்தனும் இந்த பதிவை பார்த்து விட்டு கொஞ்சம் கூகிளில் மேய்ந்தால் எய்ட்ஸ் கூட அமெரிக்கா பரப்பிய வைரஸ் போன்ற பல நாதாரிதனத்தோடு கொஞ்சம் உண்மைகளையும் படிக்கலாம்.

 சியரா லியோன் வெட்டப்பட்ட கைகளை தொட்டு பிடித்தபடி அந்த சிறுமியை தன் சகதோழி அழைத்து செல்லும் அந்த வீடியோ காட்சியும்,எங்களை விலங்குகளை விட மோசமாகத்தான் நடத்தினார்கள்,கொலை செய்ய செல்லும் முன்பு கோகைன் எனும் போதை மருந்து கொடுக்கப்பட்ட பின்பே நாங்கள் கொலை செய்ய அனுப்பப்பட்டோம் என்று அந்த சிறுவனின் பேட்டியும்,என்னோடு சேர்த்து மொத்தம் ஆறு பேரை கையை வெட்டினார்கள் வெட்டியவன் என்னைவிட கொஞ்சம் பெரியவனாக இருந்தான் என்று அந்த சிறுமி பேட்டி கொடுத்துவிட்டு.வெட்டப்பட்ட இரண்டு கைகளை காட்டி அவள் படிக்கும் பாட புத்தகத்தை காலால் திருப்பிய போது உயிர் உருகி கண்களின் வழியே கண்ணீராய் வெளியேறியது போல் ஓர் உணர்வு.



சியரா லியோன் ஆப்ரிக்கா கண்டத்தில் லைபீரியாவிற்கு பக்கத்தில் இருக்கும் குட்டி நாடு மொத்தம் 31 % மக்கள் மட்டுமே படித்தவர்கள்.52.6 % மக்கள் விவசாயத்தையும்,மீன்பிடிக்கும் தொழிலை நம்பி வாழ்பவர்கள்,சராசரி வாழ்க்கை 52 ஆண்டுகள். இந்த ஏழ்மை நிலைக்கு ஓர் முக்கிய காரணம் சியரா லியோனில் கிடைக்கும். (CONFLICT DIAMONDS) கடத்தல் வைரங்கள்  என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?ஆம் நம்பித்தான் ஆக வேண்டும். சியரா லியோனில் கொட்டிக்கிடக்கும் வைர வளத்திற்கு அந்த நாடு சுவர்க்க பூமியாக மாறி இருக்க வேண்டும்.ஆனால் தீவிரவாதமும்,வறுமையின் பிடியிலும் சிக்கி நரகமாக மாறியது.அங்கு கிடைத்த வைரத்தில் அந்த மக்களின் ரத்தக்கறை படிந்துபோனது.வைரத்தின் மீதுள்ள மோகத்தில் லிபியாவிடம் ஆயுத பயிற்சி பெற்ற   Revolutionary United Front (RUF) என்ற கொடூரமான ஆயுதகுழுவின் பிடியில் சிக்கி ஆயிரக்கணக்கில் மக்கள் தங்கள் கை,கால்,மூக்கு,காதுகளை இழந்ததில்லாமல், சிறுமிகளும்,பெண்களும் கொடூரமான கூட்டு கற்பழிப்புக்கு உள்ளானார்கள்.
(Foday Sankoh led a vicious rebel group whose fighters used machetes to hack off the hands, feet, lips and ears of Sierra Leone's civilians and raped thousands of girls and women. )
                    ஆதாரம் : http://news.bbc.co.uk/ Wednesday, 30 July, 2003
                     http://www.sc-sl.org/ The special Court for Sierra Leone (Case no. I 03-mar-2009)

போதேய் சன்கோஹ்
போதேய் சன்கோஹ் 17-அக்டோபர்-1937 ல் ( Masang mayoso, Tonkolili, Republic Of Sierra Leone)  பிறந்தவன்  RUF –இயகத்தின் தலைவன் இவனது முக்கிய நோக்கம் சியரா லியோனின் காணோ என்ற மாவட்டத்தில் கிடைக்கும் வைரத்தை சுரண்டவதும் அதை வைத்து ஆயுதம் வாங்கி அரசாங்கத்தை எதிர்ப்பதும்,பொது மக்களை கொல்வதாக மட்டுமே இருந்தது.உதாரணமாக போகிற போக்கில் துப்பாக்கி எடுத்து (துப்பாக்கினு சொன்ன உடன் நீங்கள் நம்ம ஊரு போலீஸ் அங்கிள் வச்சு இருப்பாங்களே அப்புடி எல்லாம் நினைச்சு கற்பனை பண்ணாதிங்க எல்லாமே எ.கே-47 ரகம் மற்றும் அதைவிட  கொஞ்சம் சக்தி  குறைந்ததும் அதைவிட சக்தி வாய்ந்தவையும்)  யாரெல்லாம் கண்ணுல மாட்டுராங்கலலோ சும்மா பொட்டுன்னு போட்டுட்டு தெலுங்கு படங்களில் வரும் வில்லன்கள் மாதிரி ஜீப்பில் ஏறி போய்கொண்டே இருப்பார்கள்.கொலை கொஞ்சம் வித்தியாசமா இருக்கணும்னா உயிரோடு அப்புடியே உக்கார வைத்து கொஞ்சமா பெட்ரோல் மட்டும் ஊத்தி கொளுத்திவிட்டு போய்டுவாங்க.இதை செய்தது எல்லாம் RUF –இயகத்தின் 18 வயதுக்கு கீழே இருந்த சிறுவர்கள்.

அபு பக்கர் கார்போ, 31,RUF இயக்கத்தால் கைகளை இழந்தவர் 

போதேய் சன்கோஹ்வின்  RUF இயக்கத்தை சேர்ந்தவர்கள் சிறுவர்களை கடத்தி போதை மருந்துக்கு அடிமை ஆக்கி மூளைச்சலவை செய்து,தங்கள் பெற்றோர்களையே கொலை செய்ய பயிற்சி அளிக்கப்பட்டனர்.மேலும் இந்த சிறுவர்கள் செக்ஸ் அடிமைகளாகவும்,பயன்படுத்த பட்டனர்.பயிற்சியின் போது இவர்களுக்கு சொல்லப்படும் முக்கிய விஷயம் நீங்கள் இந்த நாட்டை கட்டி எழுப்ப வந்தவர்கள் மற்றவர்கள் நாட்டை சுரண்டுகிறார்கள் என்று போதித்தனர்.மேலும்  நம்மில் அடிமை இல்லை தலைவனும் இல்லை(No Master And No Slave) என்பது போன்ற மாய உலகில் சிறுவர்களை கொலைவெறி ஏற்றி மனித வேட்டையை நடத்த வைத்தனர்  யார் இவர்கள் கண்ணில் மாட்டினாலும் பரலோகம் தான்,மாட்டியவர் தங்கள் பெற்றோராக இருந்தாலும் மரணம் அல்லது இரண்டு கைகளை வெட்டி விடுவார்கள்.
10-வருட போர் போதேய் சன்கோஹ் 2000-ம் ஆண்டு ஐக்கிய நாட்டு படைகளால் கைது செய்யப்பட்ட போது நிறைவுக்கு வந்தது.22 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு பக்கவாதத்தால் பக்காவாக பாதிக்கப்பட்டு செத்துப்போனான். போதேய் சன்கோஹ்-ன் மரணம் அந்த நாட்டை கொண்டாட வைத்தது.2002 ம் ஆண்டு உள்நாட்டு போர் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக ஐ.நா சபை அறிவிப்பு செய்தது.  
இதில் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால் போதேய் சன்கோஹ் மறைவுக்கு பிறகு  RUF- மிகப்பெரிய அரசியல் சக்தியாக மாறியது என்பது தான் அனால் கொஞ்சம் மனதுக்கு நிறைவான விஷயம் தேர்தலில் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பதே.
Blood Diamond-2006 

சியரா லியோனில் நடந்த உள்நாட்டு போரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் Blood Diamond-2006 சாக்லேட் பாய் லியர்டானோ-டி-காப்ரியோ,டிஜிமொன் ஹௌன்சன்,ஜெனிபர் கோன்னேல்லி ஆகியோர் நடித்த படம்.
படத்தின் கதை சாலமன் வான்டி ஓர் மீனவன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகள், எதிர்பாராத ஓர் சூழலில் சாலமன் RUF இயக்கத்திடம் மாட்டிக்கொள்ள வைரம் எடுக்கும் கடுமையான வேலையில் ஈடுபடுத்த படுகிறான்.ஓர் நாள் அவனிடம் பிங்க் நிற வைரம் ஒன்று கிடைக்கிறது.எல்லோர் கண்ணிலும் மண்ணை தூவி அந்த வைரத்தை புதைக்க போகும்போது அதை RUF கமாண்டர் பார்த்துவிட அந்த வைரத்தை என்னிடம் தா என்று துப்பாக்கியை நெற்றிப்பொட்டில் வைத்து கேட்க.அந்த நேரத்தில் அங்கே வைர கடத்தலை தடுக்கும் ராணுவம் வந்துவிடுகிறது.அந்த தாக்குதலில் கமாண்டரின் ஒரு கண் போய்விட இப்போது எல்லோரும் சிறையில்.
மறுபுறம் டானி ஆர்செர் வைரங்களை கடத்தும் போது பிடிபட்டு அதே சிறையில் அடைக்கப்பட சாலமன் வான்டியிடம் இருக்கும் வைரம் பற்றி தெரிந்து கொண்டு சாலமன் வான்டியை சிறையில் இருந்து ஆர்செர் வெளியில் கொண்டுவருகிறான்.வெளியே வந்த சாலமன்  தன் குடும்பத்தை தேட மனைவி மற்றும் மகளின் இருப்பிடத்தை ஆர்செர்ரோடு சேர்ந்து மேடி பௌவ்ன் என்னும் வைரங்களை கடத்துபவர்களை பற்றி எழுத வந்து இருக்கும் ஓர் பெண் பத்திரிக்கை  ரிப்போர்ட்டர் மூலம் கண்டுபிடிக்கிறான்.மகன் RUF இயக்கத்தால் கடத்தப்பட்டதை மனைவி மூலம் தெரிந்து கொள்கிறான். ஆர்செரோடு சேர்ந்து வைரத்தை எடுத்தானா மகனை மீட்டானா என்பதை மீதி படத்தை பாருங்கள்.




டானி ஆர்செராக லியர்டானோ-டி-காப்ரியோ வைரம் கடத்தும்  முன்னால் ராணுவ வீரனாக நடித்து இருப்பார்.டைட்டானிக் படத்தில் நடித்த தம்பியா இது என்று நீங்கள் ஆச்சர்யப்பட வைக்கும் நடிப்பு, ஜெனிபர் கோன்னேல்லி மீது உள்ள காதலை அவள் ஒரு ரிபோர்ட்டர் என்பதால் சொல்லாமல் விலகி செல்வது,ராணுவ வீரனுக்கே உள்ள மிடுக்கு,ஆப்ரிக்கன் போல ஆங்கில உச்சரிப்பு, எல்லாம் மிக அழகாக இருக்கும்.மேலும் கடத்தப்படும் வைரம் இந்தியா கொண்டுசெல்ல பட்டு பட்டைதீட்டி நகைகளோடு சேர்க்கப்படும் என்று அவர் சொல்லும் போது நம்மை நிச்சயம் அதிர  வைக்கும்.
டிஜிமொன் ஹௌன்சன் - சாலமன் வான்டியாக வாழ்ந்து இருப்பார் ஜெயிலில் நிர்வாணமாக நின்று RUF கமாண்டரிடம் கொதிக்கும் காட்சியாகட்டும்,வேனில் போகும் போது ஜெனிபர் கோன்னேல்லியிடம் நீ இந்த போரை பற்றி எழுதினால் உங்கள் நாடு எங்களுக்கு உதவும் தானே என்று ஒரு எதிர்பார்பை முகத்தில் தேக்கிய படி கேட்கும் காட்சியாகட்டும் துப்பாக்கியை தூக்கியபடி நிற்கும் மகனிடம் ஒரு சிறந்த தகப்பனாக அவர் பேசும் வசனமாகட்டும் மனிதர் கண்ணில் இருந்து மறையவே மாட்டார்.ஜெனிபர் கோன்னேல்லி- மேடி பௌவ்ன் என்னும் அழகான ரிபோர்ட்டர் நிறைவாக செய்து இருப்பார்.
படத்தை கடைசிவரை தூக்கி சுமந்து இருப்பது James Newton Howard-ன் இசையும் Eduardo Serra-வின் கேமராவும் அந்த காடுகளில் லியர்டானோ-டி-காப்ரியோடும், ஹௌன்சன் டிஜிமொனோடும் உங்களை பயணிக்க வைக்கும் என்பதை அருள்மிகு திரைப்படம் காக்கும் மாரியம்மன் மீது கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்து தருவேன்.......





Blood Diamond documentary 

Blood Diamond திரைப்படம் வெளிக்கொணர்ந்த உண்மையை தொடர்ந்து அமெரிக்காவின் ஹிஸ்டரி சேனல் 2006-ல் சியரா லியோனில் நேரடியாக கள ஆய்வை மேற்கொண்டு எடுக்கப்பட்ட டாகுமெண்டரி.இதில் போரில் பாதிக்கப்பட்ட மக்களையும் RUF-ல் இருந்த சிறுவர்களையும் பேட்டிகண்டு வெளிவந்தது. வார்த்தைகளில் சொல்லமுடியாத சில வலிகளை காணொளி தரும் என்ற நம்பிக்கையில் இணைப்புகளை தருகிறேன் கிளிக்கி பாருங்கள்.  

வைரங்கள் விலை உயர்ந்தவை,மேற்குலகின் காதல் சின்னம் அன்பை பரிமாறிக்கொள்ள அன்பளிப்புகளாக நெக்லெஸ்களையும்,மோதிரங்களையும் ,மூக்குத்திகளையும் அலங்கரிப்பவை ஆனால் அதன் பின்னால் ஒளிந்திருக்கும் வர்ணிக்க முடியாத சோகம் வைரம் வாங்குவதற்கு முன் நம்மை ஒரு நிமிடம் இந்த இரண்டு படங்களும் யோசிக்க வைக்கும்.




http://www.youtube.com/watch?v=Ve42DWluB8A&feature=channel
http://www.youtube.com/watch?v=PugaQJcAn64&feature=related
மேலே உள்ள லிங்க்கை கிளிக்கவும்....

1 comment:

Unknown said...

Really it sickens my soul.........

Post a Comment