அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! நன்றி! ...

22 January, 2011

காதலின் நிலைகள் மூன்று..!


காதலின் ஆரம்ப நிலையில்


தனிமையில் சிரிப்பாய்!


கண்ணாடியின் தடிமன்
உன் பிம்பத்தால் மெலியும்!

சீப்பின் பற்கள் பழுதடைந்து போகும்!

ஒழுக்கம் கடை பிடிப்பாய்!

ஒரேநாளில் பலமுறை
அலங்கரித்து கொள்வாய்!

உன்னவள் பவனி வரும்
தெருமுனைகளின் பிள்ளையார்க்கு
நண்பனாவாய்!

உன் தூக்கம் குறையும்!
 பசியின் புனிதம் புரியும்!

நீ தேவனாவாய்,
உன்னவள் தேவதையாவாள்,
உங்கள் தெரு பிள்ளைகள்
உங்களுக்கு தூதுவர்கள் ஆவார்கள்!

சிறகில்லாமல் பறக்கச் செய்வாய் !

சில எதிரிகளும் முளைத் தெழுவர்......!


காதலின் இடை நிலையில்



எதிரிகளின் வாயில்

அகப்பட்ட அவலாகிப்போவாய்!


சுற்றத்தாரின் வார்த்தைகளே

உன்னை வதக்கி, வறுத்தெடுத்துவிட,

போர்களத்தில் எதிரிகள் எய்த

அம்புகள் துளைத்த போர்வீரன்

போல் உணர்வாய்!

உன் உள்ளத்தில்
இடி இடிக்கும்!

கண்களில் மழை
சொரியும்!

வற்றாத ஜீவ நதிகள் இரண்டு

கன்னங்களில் வழிந்தோடி

கால் நோக்கி பிரயாணப்படும்!

மௌனம் உன் தேக தேசத்தின்

சிறப்பு மொழி ஆகிப்போகும்!

சிரிப்பு கானல் நீராய்க்

காணமல் போகும்!

அழவேண்டி மட்டுமே
கழிவறைக்கதவை
தாழிட்டு கொள்வாய்!

நமுட்டு சிரிப்பும்,ஏளன பேச்சும்
அறிவுரைகளும் உனக்காய்
பிரதானமாகிப்போகும்!

முட்கிரீடம் தலைசூடி
காதலை நோக்கி
கடும்தவம் புரிவாய்!

காதலை
அணுகவும் இயலாமல்
அகலவும் இயலாமல்
நரக நெருப்பில்
கால்புதைத்தவனாய்
துடிதுடித்துப்போவாய்..........!


காதலின் கடை நிலையில்



சூழ்நிலையை மாற்றியமைக்கும்

சக்திகொள்வாய்!



சமுக மூட தனத்தை

முறியடித்து!

ஜாதி,மத,பேத

தடைகளைத் தவிடு பொடியாக

தகர்த்தெறிந்து !

காற்றினில் கலந்த வாசமாய்,
கடலினில் கலந்த மழைத்துளியாய்
காதல் ஜோதியில் கலந்து,
காதல் தேசத்து மன்னனாவாய்!

வாழ்கை அழகுபெற,
வாழ்கை அர்த்தப்பட
காதலியுங்கள்....!


-நவீன் மென்மையானவன்

குறிப்பு:
நண்பர்களே.. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இன்டலி மற்றும் தமிழ்மணம்,உலவு இவற்றில் வாக்களியுங்கள்.

20 January, 2011

தமிழ் மருத்துவம் (சித்தா) - 4


மூலிகை மருத்துவம்





6. அமுக்குரா
( தாவரவியல் பெயர்: Withania somnifera)
கொஞ்சம் துவர்ப்பாம் கொடிய சுயம் சூலை அரி

மிஞ்சு கரப்பான் பாண்டு வெப்பதப்பு விஞ்சி

முசுவுறு தோடமும்போம் மோகம் அனலுண்டாம்
அசுவந்திக்கென்றறி.

மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் சிறு கிளைகளையும் உடைய ஐந்தடி வரை வளரக்கூடிய குறுஞ்செடி வகை. கிழங்கே மருத்துவப் பயனுடையது. இது ஆயுர்வேதத்தில் அசுவகந்தி என்றழைக்கப் படுகிறது. அசுவகந்தி லேகியம், அசுவகந்தி தைலம் பெரும்பாலோருக்கு அறிமுகமானதே.

நோய் நீக்கி உடல் தேற்றியாகவும், பித்தநீர் பெருக்கியாகவும், குடல் தாது வெப்பகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், காமம் பெருக்கியகவும்
செயற்படும்.

1. இலையை மென்மையாக அரைத்துப் பற்றுப் போட கட்டி, எரி கரப்பான், பாலியல் நோய்ப் புண் ஆகியவை தீரும்.

2. 2 கிராம் உலர்ந்த கிழங்குப்பொடி தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிட்டு வர உடல் பலவீனம், காசம், பசியின்மை, மூட்டு அழற்சி, செரிமானக் குறைவு, இருமல்,உடல் வீக்கம், முதுமைத் தளர்ச்சி ஆகியவை நீங்கும்.

3. இலை, வேர் ஆகியவை சம அளவு எடுத்து அரைத்துப் பற்றுப் போட அரச பிளவை, ஆறாத புண்கள், மூட்டு வீக்கம் ஆகியவை தீரும்.

4. காயை அரைத்துப் படர் தாமரையில் தடவி வர படர்தாமரை மறையும்.

5. சூரணத்தைப் பாலில் கலந்து வீக்கம், படுக்கைப்புண் ஆகியவற்றிற்குப் பூச புண் ஆறும்.

6. அமுக்குரா சூரணம் 10 கிராம், கசகசா 30 கிராம், பாதாம் பருப்பு 10 கிராம், சாரப்பருப்பு 5 கிராம், பிச்தாப்பருப்பு 5 கிராம் ஊற வைத்துத் தோல் நீக்கி அரைத்து 200 மில்லி பாலில் கலந்து சர்க்கரைச் சேர்த்து வெறும் வயிற்றில் காலையில் மட்டும் 90 நாட்கள் சாப்பிட இழந்த இளமையைப் பெறலாம்.



7. அம்மான் பச்சரிசி
( தாவரவியல் பெயர்: Euphorbia hirta)


காந்தல் விரணமலக் கட்டுமே கந்தடிப்புச்
சேர்த்த தினவிவைகள் தேகம்விட்டுப் - பேர்ந்தென்றாய்
ஓருமம்மான் பச்சரிசிக் குன்ம இனத்துடனே 
கூருமம் மா னொத்த 
கண்ணாய் கூறு




ஈரமுள்ள இடங்களில் தானே வளரும் சிறுசெடி. எதிரடுக்கில் கூர் நுனிப் பற்களுடைய, ஈட்டி வடிவ இலைகளையுடையது.

வயிற்றுப் பூச்சி அகற்றியாகவும், மலமிளக்கியாகவும், வெப்புத் தணிப்பானாகவும், வீக்கம் குறைப்பானாகவும் செயற்படும்.

1. இலையைச் சமைத்து உண்ண வறட்சி அகலும், வாய், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு, புண் தீரும்.

2. தூதுவேளை இலையுடன் துவையல் செய்து சாப்பிடத் தாது, உடல் பலப்படும்.

3. கீழா நெல்லியுடன் சமஅளவு இலை சேர்த்து காலை, மதியம் இரு வேளையும் எருமைத் தயிரில் உண்ண உடம்பு எரிச்சல், நமைச்சல், மேகரணம், தாது இழப்பு தீரும்.

4. பாலைத்தடவி வர நகச்சுற்று, முகப்பரு, பால்பரு மறையும். கால் ஆணி வலி குறையும்.

5. இலையை நெல்லிக்காயளவு நன்கு அரைத்துப் பசும்பாலில் கலக்கிக் காலையில் மட்டும் மூன்று நாள் கொடுக்கச் சிறுநீருடன் இரத்தம் போதல்,
நீர்க்கடுப்பு, மலக்கட்டு, உடல் நமைச்சல்ஆகியவை தீரும்.

6. பூக்களை சுத்தம் செய்து பசும்பால் விட்டு, அரைத்து பசும்பாலில் ஒருவாரம்
கொடுக்க தாய்ப்பால் சுரக்கும்.

7. அம்மான் பச்சரிசி இலையை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று முதல் ஐந்து நாட்கள் கொடுக்க வெள்ளைப்படுதல் குணமாகும்.

சித்திரப்பாலாடை என்று இதற்கு வேறு பெயரும் உண்டு.



8. அரசு
(தாவரவியல் பெயர்: Ficus religiosa)

கூரிய இலைகளையுடைய பெருமரம். எரி, குளக்கரைகளில் புனித மரமாக வளர்க்கப்படுகிறது. கொழுந்து, பட்டை, வேர், விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

கொழுந்து வெப்பகற்றித் தாகந்தணிப்பானாகவும், விதை காமம் பெருக்கியாகவும், வேர், பட்டை ஆகியவை வீக்கம் குறைக்கும் மருந்தாகவும் பயன்படும்.

1. துளிர் இலையை அரைத்துப் பற்றிடப் புண்கள் ஆறும்.

2. வேர்ப்பட்டை 30 கிராம் 300 மி.லி. நீரில் போட்டு 100 மி.லி.யாகக் காய்ச்சி, பால் சர்க்கரை சேர்த்துப் பருகி வர வெட்டைச்சூடு, சொறி, சிரங்கு, தினவு, நீர் எரிச்சல், ஆகியவை தீரும்.

3. மரப்பட்டைத் தூளைக் கருக்கித் தேங்காய் எண்ணெயில் புண், சொறிகளுக்குப் பூசக் குணமாகும்.

4. மரப்பட்டைத் தூள் 2 சிட்டிகை நீரில் ஊறவைத்து வடிகட்டிக் குடிக்க விக்கல், தொண்டைக் கட்டு, குரல்வளை நோய் தீரும்.

5. அரசு விதைத் தூள் உயிரணுக்களைப் பெருக்கி ஆண் மலட்டினை நீக்கும்.

6. அரசங் கொழுந்தை குடிநீராக்கிக் குடிக்க சுரம், தாகம் ஆகியன தீரும்.

7. உலர்ந்த பழத்தை இடித்துப் பொடி செய்து 5 கிராம் வெந்நீரில் காலை, மாலை 20 நாட்கள் கொடுக்க சுவாசக் காசம் தீரும்.



9. அரிவாள்மனைப் பூண்டு
(தாவரவியல் பெயர்: Sida caprinifoliya)

கூர்நுனிப் பற்கள் கொண்ட ஆப்பு வடிவ இலைகளை உடைய மிகக் குறுஞ்செடியினம். இலையே மருந்தாகப் பயன்படும்.

1. இலையைக் கசக்கி வெட்டுக் காயத்தில் பிழிய இரத்தப் பெருக்கு நிற்கும்.

2. இதனுடன் சமஅளவு குப்பைமேனி இலை, பூண்டுப்பல் 2, மிளகு 3 சேர்த்து அரைத்துப் புன்னைக்காயளவு உள்ளுக்குக் கொடுத்து, காயத்திலும் கட்ட நஞ்சு முறியும். உப்பு, புளி நீக்க வேண்டும்.



10. அல்லி
( தாவரவியல் பெயர்: Nymphae nouchali Burmf)
மேகமறும் புண்ணாறும் விட்டேகும் நீரிழிவு
தாகந் தணியும் தாழல்களும் – வாகான
மெல்லியலே ஆயுள்மறை வேதிய ரெலாமுரைக்கும்
அல்லி மலரால் அறி.
நீரில் மிதக்கும் அகன்ற நீள்வட்ட இலைகளையும் நுண்குழலுடைய இலைக் காம்புகளையும் உடைய நீர்ச்செடி. மலர்கள் நீர்மேல் மிதந்து கொண்டிருக்கும். வெண்ணிற மலர்களையுடையது வெள்ளை அல்லி எனவும், செந்நிற மலர்களையுடையது செவ்வல்லி, அரக்காம்பல் எனவும், நீல மலர்களையுடையது கருநெய்தல் (நீலோற்பலம்), குவளையெனவும் வழங்கப் பெறும்.
இலை, பூ, விதை, கிழங்கு ஆகியவை மருத்துவப் பயனுடையவை. கிழங்கு குளிர்ச்சி தரும். பூ தாது வெப்பகற்றும், இரத்தக் கசிவைத் தடுக்கும்.
1. இலையை நீரிலிட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர எளிதில் ஆறும்.
2. 200 கிராம் உலர்ந்த வெள்ளை இதழ்களை 6 லிட்டர் நீரில் ஊறவைத்து காலையில் வடித்த நீரை 30 மி.லி. யாகக் காலை, மாலை குடித்துவர சிறு நீரில் இரத்தம் சீழ் வருதல், நீர்ப்பாதைப் புண், சிறு மிகுதியாகக் கழிதல, தாகம், உட்காய்ச்சல் ஆகியவை தீரும்.
3. அல்லிக் கிழங்கை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு 5 கிராம் பாலில் கலந்து காலை மாலையாகச் சாப்பிட குடல்புண், வயிற்றுப் போக்கு, மூலம் ஆகியவை குணமாகும். கருவுற்றிருக்கும்போது மாதவிலக்குக் கண்டால் இதனைப் பயன்படுத்தக் குணமாகும்.
4. கருநெய்தல் பூ 50 கிராம் 250 மி.லி. நீரிலிட்டு 125 மி.லி ஆகும் வரைக காய்ச்சி வடிகட்டியத்தில் 30 கிராம் சர்க்கரை சேர்த்துத் தென் பதமாகக் காய்ச்சி காலை, மாலை 15 மி.லி.யாகச் சாப்பிட மூளைக்கொதிப்பு தணியும். கண் குளிர்ச்சியடையும், இதயப்படபடப்பைத் தணிக்கும்.
5. கருநெய்தல் மலரில் உள்ள மகரந்தப் பொடியை உலர்த்தி நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிக்க உடல் எரிச்சல், இரத்த மூலம், பெரும்பாடு ஆகியவை தீரும்.
ஆற்றுநீர் வாதம் போக்கும்,
அருவிநீர் பித்தம் போக்கும்,
சோற்றுநீர் இரண்டையும் போக்கும்.

தொடரும்
_ பூஞ்சோலை

குறிப்பு:
நண்பர்களே.. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இன்டலி மற்றும் தமிழ்மணம்,உலவு இவற்றில் வாக்களியுங்கள்.