அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! நன்றி! ...

10 May, 2011

தமிழ் மருத்துவம் (சித்தா) - 7
மூலிகைகளைப் பத்தி படிச்சி கொஞ்சம் போரடிச்சிருக்கும். அதனால தினமும் நாம சமையல்ல பயன் படுத்தற கடுகு, சீரகம், பட்ட சோம்பு, இஞ்சி, பூண்டு போன்ற மசாலா அயிட்டங்களோட மருத்துவ குணங்களைப் பார்க்கலாம்.கடுகு
(தாவரவியல் பெயர் :Brassica juncea)

இடிகாச நாசிக்கு ரீளைகபம் பித்தங்


கடிவாத சீதங் கடுப்போ-குடலிற்

படுகோட்டு நோயென்னும் பங்கிவைக ளைப்புண்

கடுகோட்டு மேன்மருந்த காண்.

மந்தமயக் கம்வாதம் வாய்நீர்ச் சுழற்றலறு

முந்து சுகப்பிரச வங்களுண்டா-மிந்துஙதன்

மானே கிராணிகுன்ம மாறுமுத் தோடமும்போம்

தானே கடுகிற்குத் தான்.

கடுகுன்னு சொன்னதுமே மொதல்ல நமக்கு நெனப்பு வர்றது தாளிப்பு தான். ஒரு சமையல் முழுமையடையறது தாளிப்புலதான் இருக்கு. இந்த கடுகுல ரெண்டு வகை இருக்கு. கருங்கடுகு இத செங்கடுகுன்னும் சொல்லுவாங்க. இன்னொண்ணு வெண்கடுகு. இது நாட்டு மருந்துக் கடைல கிடைக்கும்.
வாந்தி உண்டாக்கறது, வெப்பத்த அதிகப்படுத்தறது, சிறுநீர் பெருக்குதல், நாம சாப்பிடற உணவுப்பொருட்கள வேகமா செரிக்க வைக்கறது போன்ற மருத்துவ குணங்கள் கடுகுக்கு இருக்கு.
1. பூச்சிமருந்து குடிச்சவுங்க, தூக்க மாத்திரை சாப்பிட்டவுங்களுக்கு 2 கிராம் கடுகை நைசா அரைச்சு தண்ணில கலக்கி குடிக்க கொடுத்தா உடனடியா வாந்தி எடுத்து விஷம் வெளியேறும்.
2. கடுகோட சமஅளவு முருங்கப்பட்டை சேர்த்து அரைச்சு பத்துப்போட கைகால் குடைச்சல், மூட்டு வலி, நரம்புப் பிடிப்பு இதெல்லாம் தீரும். எரிச்சல் இருந்தா உடனே கழுவிரணும்.
3. 10 கிராம் கடுகைப் பவுடராக்கி கால் லிட்டர் தண்ணில ஊறவச்சு வடிகட்டிக் குடிச்சா விக்கல் உடனே நிக்கும்.
4. கடுகு எண்ணெயோட 5 மடங்கு விளக்கெண்ணெய் கலந்து கொஞ்சம் கற்பூரம் சேர்த்து மூட்டு வலி, மார்புவலிக்குத் தேய்க்க வலி குறையும்.
5. கடுகைப் பொடிச்சு அரிசி மாவுல கலந்து பிசைஞ்சு களிபோல வேகவச்சு துணில தடவி வலியுள்ள இடங்கள்ல போட வயித்துவலி, வாதவலி, கெண்ட வலி எல்லா வலியும் தீரும்.

சீரகம்
(தாவரவியல் பெயர் : Cuminum cyminum)
எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம்
கட்டுத்தேனில் கலந்துண்ன
விக்கலும் விட்டுப்போகுமே
விடாவிடில் நான் தேரனும் அல்லவே
இதுவும் நாம தினமும் சமையலுக்குப் பயன்படுத்தற ஒரு கடைச்சரக்குதான். சீரகம் நம்ம வயித்துல இருக்குற வாயுவ நீக்கி, செரிமானத்த அதிகப்படுத்தி, சிறுநீர்பெருக்கி, திசுக்களை இருகச் செய்யறது, மாதவிடையத் தூண்டுறது போன்ற மருத்துவக் குணங்களை உடையது.
1. சீரகத்த நல்லா காயவச்சு பவுடராக்கி 1 கிராம் அளவு எடுத்துத் தேன் அல்லது பாலில் காலை, மாலை சாப்பிட பித்தம், வாயு, உதிரச்சிக்கல், சீதக்கழிச்சல், ஆகியவை தீரும்.
2. சீரகத்த சுத்தம் செஞ்சு 50 கிராம் எடுத்து காயவச்சுப் பொடி செஞ்சு நாட்டுச் சக்கர கலந்து, விடாம தொடர்ந்து நாள்தோறும் சாப்பிட தேகம் வன்மை பெறும்.
3. பொடித்த சீரகம் ஒரு ஸ்பூன் கற்கண்டு தூள் சேர்த்து சாப்பிட்டா இருமல் தீரும்.
4. சீரகத்த கரிசாலைச் சாறில் ஊறப் போட்டு உலர்த்தின பொடி 5 கிராம், சர்க்கரை 10 கிராம், சுக்குப்பொடி 5 கிராம் இந்த மூன்று பொடிகளையும் கலந்து தினமிருவேளை உட்கொள்ள காமாலை, வாயு, உட்சுரம் தீரும்.
5. தேவையான அளவு சுத்தம் செஞ்ச சீரகத்த எலுமிச்சைச்சாறு, இஞ்சிச்சாறு, நெல்லிச்சாறு ஆகியவை ஒவ்வொன்னுலையும் மும்மூணு முறை ஊறவச்சு உலர்த்திப் பொடி செஞ்சு அரைத்தேக்கரண்டி காலை, மாலை சாப்பிட்டு வர செரியாமை, சுவையின்மை, பித்தமயக்கம், கண்ணெரிச்சல், வயிற்றுவலி, மூலக்கொதிப்பு, உடல் வெப்பம் ஆகியவை தீரும்.
6. சீரகத்த அரச்சுப் பத்துபோட்டா மார்பக வீக்கம், விரைவீக்கம் ஆகியவை குறையும். எரிச்சல் வலியுள்ள இடங்கள்ல தடவ குணமாகும்.

வெந்தயம்
(தாவரவியல் பெயர் : Trigonella foenum graecum)
பிள்ளைக் கணக்காய்ச்சல் பேதி சீதக்கழிச்சல்
தொல்லை செய்யும் மேகம் தொலையும் காண் _ உள்ளபடி
வெச்சென்ற மேனி மிகவும் குளிர்ச்சியதாம்
அச்சம் இலை வெந்தயத்திற்காய்.
இது கீரை வகையைச் சேர்ந்தது. இலைகளும் விதைகளும் மருத்துவப் பயனுள்ளது. வெந்தயத்த காரக்குழம்பு, ஊறுகாய்க்கு அவசியம் பயன் படுத்துவாங்க. கீரையக் கூட்டா செஞ்சு சாப்பிட்டா உடலுக்கு நல்ல குளிர்ச்சியத் தரும்.
1. இலைகளை தணலில் வதக்கி இளஞ்சூட்டுல பத்துப் போட வீக்கம் தீப்புண் குணமாகும்.
2. வெந்தயத்த நல்லா காயவச்சுப் பொடியாக்கி காலை மாலை ஒரு தேக்கரண்டி தொடர்ந்து சாப்பிட்டு வர மதுமேகம்(சர்க்கரை நோய்) குறையும்.
3. வெந்தயம் 20 கிராம் எடுத்து 350 கிராம் பச்சரிசியுடன் சேர்த்து சமைச்சு சாப்பிட இரத்தம் ஊறும்.
4. கஞ்சியில் வெந்தயத்த சேர்த்துக் காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.
5. வெந்தயத்த ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊறவச்சு நல்லா அரைச்சு தலைக்கு தேச்சு குளிக்க முடி உதிராம நல்லா வளரும்.
6. 5 கிராம் வெந்தயத்த நல்லா வேகவச்சுக் கடஞ்சு கொஞ்சம் தேன் சேர்த்துச் சாப்பிட தாய்ப்பால் பெருகும்.
7. வெந்தயம், கோதுமை ரெண்டும் சேர்த்து வறுத்து கஞ்சியாக்கி சாப்பிட உடல் வெப்பம் நீங்கும்.
8. வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் சமமா எடுத்து நெய் விட்டு வறுத்துப் பொடியாக்கி சாப்பிட்டில் கலந்து சாப்பிட வயிற்றுவலி, பொருமல், ஈரல வீக்கம் குறையும்.
9. வெந்தயம், வாதுமைப் பருப்பு, கசகசா, உடைத்த கோதுமை, நெய், பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட உடல் வன்மையாவும், வலுவாவும் இருக்கும். இடுப்பு வலி தீரும்.
10. வெந்தயத்த சீமை அத்திப்பழம் சேர்த்து அரைச்சு கட்டிகளுக்குப் பத்துபோட்டா கட்டி உடையும். படைகளுக்கும் பூசலாம்.
11. வெந்தயத்தையும் அரைச்சுத் தீப்புண்கள் மேல பூச எரிச்சல் குறையும்.

சோம்பு
(தாவரவியல் பெயர் : Pimpinella Anisum)
இதனை பெருஞ்சீரகம்னும் சொல்வாங்க. சோம்பு செரிமான சக்திய அதிகப்படுத்தும்.
1. சோம்பை இளவறுப்பா வறுத்து பொடித்து 2 கிராம் எடையளவு சர்க்கரை கலந்து, தினம் இருவேளை சாப்பிட வயிற்றுவலி, வயிற்று உப்புசம், செரியாமை, இருமல், இரைப்பு நோய் ஆகியவை குறையும்.
2. சோம்புக் கஷாயம் 15 முதல் 20 மி.லி அளவு குழந்தைகளுக்குக் கொடுக்க கழிச்சல், வயிற்றுப் பொருமல் நீங்கும்.
3. சோம்பு, சீரகம், மிளகு சம அளவு சேர்த்து பொடி செய்து பொடியை தேனுடன் சாப்பிட குரல் கம்மல், இரைப்பு, மூக்கில் நீர் பாய்தல் போன்றவை நீங்கும்.
4. சோம்பு பசியைத் தூண்டும்.
5. சோம்பு, மல்லி இரண்டையும் இள வறுப்பாக வறுத்து, ஒன்றிரண்டாக பொடித்து நாலு மடங்கு நீர் விட்டுக் காய்ச்சி, வடிகட்டி, இரண்டு தேக்கரண்டி வெண்ணெய் கலந்து குடிக்க கர்ப்பிணிப் பெண்களின் சூட்டு வலி தீரும்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
-குறள்
தொடரும்
- பூஞ்சோலை

3 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

உங்களைப் பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன் .. நேரம் இருந்தால் பார்க்கவும் ..

நம் உடலைப் பற்றி தெரிந்துக்கொள்வோம் - மருத்துவ வியாழன்

Earn Money said...

பயனுள்ள நல்ல தகவல் பகிர்வுக்க் நன்றி ஐயா

பூஞ்சோலை said...

நன்றி நண்பர்களே ...

தொடர்ந்து நீங்கள் எனது நிறை குறைகளைத் தெரியப்படுத்தவும். அது எனக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

Post a Comment