மூலிகை மருத்துவம்
11. அருகம்புல்
(தாவரவியல் பெயர்: Cynodon dactylon)
“அருகம்புல் வாதபித்த ஐயமோ டீளை
சிறுக அறுக்கும் இன்னுஞ்செப்ப அறிவுதறும்
கண்ணோ யோடு தலைநோய் கண்புகை யிரத்தபித்தம்
உண்ணோ யொழிக்கு முரை” குறுகிய நீண்ட இலைகளையுடைய நேராய் வளரும் தண்டுகளையும் உடைய ஒரு புல் வகை. ஆனைமுகக் கடவுளுக்குப் பூசனை மூலிகையாகப் பயன்படுவது.
தாகம் தணிப்பானாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், நோய் நீக்கி உடல் தேற்றியாகவும், காமம் பெருக்கியாகவும் செயல்படும்.
1. கணு நீக்கிய அருகம்புல் 30 கிராம், மாதுளை இலை 30 கிராம் அரைலிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி 50 மி.லி. அளவாக 2 மணி நேரத்திற்கு ஒரு முறை குடித்து வந்தால் காத்து, மூக்கு, ஆசனவாய் இரத்த ஒழுக்கு நிற்கும். வெப்பம் தணியும், மாதவிலக்குச் சிக்கல் நீங்கும்.
2. கணு நீக்கிய அருகம்புல் சமூலம் 30 கிராம் வெண்ணெய் போல் அரைத்து சமஅளவு வெண்ணெய் கலந்து 20 முதல் 40 நாட்கள் சாப்பிட உடல் தளர்ச்சி நீங்கி உறுதிப்படும். அறிவு மிகுந்து முகம் வசீகரமாகும்.
3. அருகம்புல் சமூலம் 30 கிராம், கீழா நெல்லிச் சமூலம் 15 கிராம் இவற்றை விழுதாய் அரைத்துத் தயிரில் கலக்கி காலையில் குடிக்க வெள்ளை, மேக அனல், உடல் வறட்சி, சிறுநீர்த் திரையில் உள்ள புண்ணால் நீர்க்கடுப்பு, சிறுநீருடன் இரத்தம் போதல் ஆகியவை தீரும்.
4. அருகம்புல் 30 கிராம் அரைத்துப் பாலில் கலந்து பருகி வர இரத்த மூலம் குணமடையும்.
5. வேண்டிய அளவு புல் எடுத்து சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் தடவி சில மணி நேரம் கழித்துக் குளித்து வரச் சொறி, சிரங்கு, தோல் நோய், வேர்க்குரு, தேமல், சேற்றுப் புண், அரிப்பு, வேனல் கட்டி ஆகியவை குணமடையும்.
6. அருகம்புல் வேர் 30 கிராம், சிறுகீரை வேர் 15 கிராம், மிளகு 5 கிராம், சீரகம் 5 கிராம் ஒரு லிட்டர் நீரில் சேர்த்துக் கால் லிட்டராகக் காய்ச்சி, பால், கற்கண்டு கலந்து பருக மருந்து வீறு தணியும். (மருந்து வீறு: கடும் மருந்துகளை உட்கொள்வதால் பல் சீழ் பிடித்து, வாய் வயிறு வெந்து காணப்படுதல்).
7. அருகு சமூலம் 100 கிராம், மிளகு 75 கிராம், சீரகம் 50 கிராம் இடித்து 1 லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு 15 நாட்கள் கடும் வெயிலில் வைத்து 45, 90, 150 நாட்கள் தலையில் தடவி வரக் கண்நோய்கள் தீரும்.
8. 1கிலோ அருகம்வேரை ஒன்றிரண்டாய் இடித்து 8 லிட்டர் நீரில் இட்டு 1 லிட்டராக வற்றக் காய்ச்சி வடித்து 1லிட்டர் நல்லெண்ணெய் கலந்து அமுக்குராக் கிழங்கு, பூமி சர்க்கரைக் கிழங்கு வகைக்கு 20 கிராம் பால் விட்டு நெகிழ அரைத்துக் கலக்கிச் சிறு தீயில் பதமுறக்காய்ச்சி வடித்து எடுத்த எண்ணெயை வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து அரைமணி கழித்துக் குளித்து வர வாதம், பித்தம், நெஞ்சு வலி, வயிற்று எரிச்சல், உடல் வறட்சி, மூலச்சூடு, தலைச் சூடு, நீர்க்கடுப்பு ஆகியவை தீரும்.
9. அருகம்வேர், நன்னாரி வேர், ஆவாரம் வேர்ப்பட்டை, குமரி வேர் வகைக்கு 50 கிராம், 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடித்து 100 மி.லியாக நாளைக்கு 5 வேளை கொடுக்க மது மேகத்தால் உண்டான மிகு தாகம் தணியும்.
12. அவரை
(தாவரவியல் பெயர் : Lablab purpurus)
உணவுக்காகப் பயிரிடப்படும் கொடிவகை. இலை, பிஞ்சு ஆகியவை மருத்துவப் பயனுடையவை. இலை குடல் வாயு அகற்றும். பிஞ்சு தாது வெப்பு அகற்றும்.
1. அவரை இலைச்சாறு 10 மி.லி. தயிருடன் காலையில் கொடுத்துவர கிராணி, மூலக்கடுப்பு, எரிச்சல் ஆகியவை தீரும்.
2. இலைச் சாற்றுடன் மஞ்சள் பொடி கலந்தோ, சுண்ணாம்பு விளக்கெண்ணெய் கலந்தோ பூசி வர ஆறும்.
3. இலைச் சாற்றை சிறு துண்டுத் துணியில் நனைத்து நெற்றியில் போட்டு வர தலைவலி, தலைப்பாரம் நீங்கும்.
4. விதை முற்றாத அவரைப்பிஞ்சைச் சமைத்து உண்பது திரிதொடம், புண், காய்ச்சல், கண்ணோய் உள்ள நோயாளர்க்கும் மருந்துண்போர்க்கும் பத்திய உணவாகும்.
13. அழிஞ்சில் “
(தாவரவியல் பெயர் : Alangium salviifolium )
நீண்ட இலைகளையுடைய முள்ளுள்ள மரம். செம்மஞ்சள் நிறமுள்ள பழங்களையுடையது. வேர்ப்பட்டை, இலை, விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
வாதநோய் நீக்கி உடல் தேற்றுதல், வாந்தி உண்டு பண்ணுதல்,பித்த நீர்ச்சுரப்பை மிகுத்தல், மலமிளக்குதல், வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லுதல், காய்ச்சல் அகற்றுதல் ஆகிய மருத்துவக் குணங்களையுடையது. அழிஞ்சிலில் செய்யப்படும் மருந்துகளைத் தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு மேல் கொடுத்தால் வாந்தி, வயிற்றுப் போக்கு, வியர்வை ஆகியவை உண்டாகும். நீடித்துச் சாப்பிட வேண்டுமாயின் இடையிடையே ஒரு வாரம் மருந்தை நிறுத்தி மீண்டும் சாப்பிடவேண்டும்.
1. வேர்ப்பட்டையை உலர்த்திப் பொடித்து 100 மில்லி கிராம் வீதம் காலை மாலை ஒரு வாரம் கொடுத்து வரக கடி விஷங்கள், தொழுநோய், கிரந்தி, புண், வயிற்றுப் போக்கு ஆகியவை குணமாகும்.
2. இலையை அரைத்து ஒரு கிராம் அளவாகக் காலை மாலை கொடுக்கக் கிராணி, குன்மம், கப நோய்கள் தீரும்.
3. சிவப்பு அழிஞ்சில் வேர்ப்பட்டைத் தூள் 100 மில்லி கிராம், கிராம்பு, சாதிக்காய், சாதிப்பத்திரி ஆகியவை சம அளவு கலந்த பொடி 200 மில்லி கிராம் கலந்து தேனில் சாப்பிட்டு வரத் தொழு நோய் குணமாகும்.
4. அழிஞ்சில் விதையிலிருந்து எடுக்கப் படும் எண்ணெயை உடம்பில் தடவி வரத் தோல்நோய்கள் குணமாகும். ஓரிரு துளிகளாக உள்ளுக்கும் கொடுக்கலாம்.
14. அறுவதா
(தாவரவியல் பெயர் : Ruta graveolens)
மணமுடைய பசுமையான குறுஞ்செடி. சதாப்பு இலை எனவும் வழங்கப் பெறும். இதன் இலையே மருத்துவப் பயனுள்ளதாகும். வலி போக்குதல்,வெப்பமுண்டாக்கல், கோழையகற்றுதல் மாதவிலக்கு உண்டாக்குதல் ஆகிய மருத்துவக் குணங்களை உடையது.
1. இலைச் சாற்றில் 10 துளியைத் தாய்ப்பாலில் கலந்து சிறு குழந்தைகளுக்கு கொடுக்க சளியை வெளியேற்றி காய்ச்சல் இசிவு ஆகியவற்றைப் போக்கும்.
2. இலையுடன் கால் பங்கு மஞ்சள் சேர்த்து அரைத்துக் குழந்தைகள் உடலில் பூசிக் குளிப்பாட்டி வர, சளி, நீர்க்கோவை முதலிய குளிர்ச்சி நோய்கள் வராமல் தடுக்கும்.
3. இலையைப் பொடித்து வைத்துக் கொண்டு வயதிற்கு ஏற்ப 1/4 முதல் 1 தேக்கரண்டி வரை தேனில் சாப்பிட வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, செரியாமை, நாட்பட்ட மார்புச் சளி, பால் மாந்தம், வயிற்றுப்போக்கு ஆகியவை தீரும்.
4. உலர்ந்த இலையை நெருப்பிலிட்டு வரும் புகையை மென்மையாக சுவாசிக்க இருமல் தணியும்.
15. ஆடாதொடை
(தாவரவியல் பெயர் : Adhatoda vasica )
ஆடாதோ டைப்பன்ன மையறுக்கும் வாதமுதற்
கோடாகோ டிச்சுரத்தின் கோதொழிக்கும்-நாடின
மிகுத்தெழுந்த சந்நிபதின் மூன்றும் விலக்கும்
அகத்துநோய் போக்கு மறி
கோடாகோ டிச்சுரத்தின் கோதொழிக்கும்-நாடின
மிகுத்தெழுந்த சந்நிபதின் மூன்றும் விலக்கும்
அகத்துநோய் போக்கு மறி
நீண்ட முழுமையான ஈட்டிவடிவ இலைகளையும் வெள்ளை நிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி. இலை, பூ, வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
சளி நீக்கி இருமல் தணிப்பானாகவும், வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும், இசிவு நோய் நீக்கியாகவும் செயல் படும்.
1. இலைச்சாறும் தேனும் சம அளவு கலந்து சர்க்கரை சேர்த்து தினம் 4 வேளை கொடுக்க இரத்த வாந்தி, கோழை மிகுந்து மூச்சுத் திணறல், இருமல், இரத்தம் கலந்த கோழை வருதல் ஆகியவை குணமாகும்.
2. இலைச்சாறு 2 தேக்கரண்டி எருமைப்பாலில் காலை மாலை கொடுத்து வரச் சீதபேதி, இரத்த பேதி குணமாகும்.
3. 10 இலைகளை அரை லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சித் தேன் கலந்து காலை, மாலை 40 நாட்கள் பருகி வர என்புருக்கிக் காசம் (T.B.) இரத்த காசம், சளிச்சுரம், சீதளவலி, விலாவலி ஆகியவை தீரும்.
4. ஆடாதொடை வேருடன் கண்டங்கத்தரி வேர் சமஅளவு சேர்த்து இடித்துச் சலித்து அரை முதல் ஒரு கிராம் வரை தேனில் சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு, சுவாச காசம், சன்னி, ஈளை, இருமல், சளிச்சுரம், என்புருக்கி, குடைச்சல் வலி ஆகியவை குணமாகும்.
5. ஆடாதொடை இலையையும், சங்கன் இலையையும் வகைக்கு ஒரு பிடி அரை லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சிக் காலை, மாலை பருகி வரக குட்டம், கரப்பான், கிரந்தி, மேகப்படை, ஊறல், விக்கல், வாந்தி, வயிற்றுவலி தீரும்.
6. உலர்ந்த ஆடாதொடை இலைத்தூளை ஊமத்தை இலையில் சுருட்டிப் புகை பிடிக்க மூச்சுத் திணறல் உடனே நிற்கும்.
7. 700 கிராம் தூய இலைகளை நறுக்கி நெய்யில் வதக்கியதில் அக்கரகாரம், சித்தரத்தை வகைக்கு 10 கிராம், இலவங்கம் 10 கிராம், ஏலம் 4 ஆகியவற்றைத் தூள் செய்து போட்டுப் போன் வறுவலாய் வறுத்து 2 லிட்டர் நீர் விட்டு 1 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டியதில் ஒரு கிலோ சர்க்கரை சேர்த்துத் தேன் பதமாகக் காய்ச்சி (ஆடாதொடை மணப்பாகு ) வெந்நீரில் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட்டு வர நீர்க்கோவை தீரும். ஒரு நாளைக்கு 3 வேளையாகநீண்ட நாட்கள் கொடுத்து வர காசம், என்புருக்கி, மார்ச்சளி, கப இருமல். நீடித்த ஆஸ்துமா, நிமோனியா ஆகியவை குணமாகும். குரல் இனிமை பெறும்.
8 ஆடாதொடை, கோரைக்கிழங்கு, பற்பாடகம், விஷ்ணுகாந்தி, துளசி, பேய்ப்புடல், கஞ்சாங்கோரை, சீந்தில் வகைக்கு ஒரு பிடி ஒரு லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 50 மி.லி. அளவாகப் பருகி வர எவ்விதச் சுரமும் நீங்கும். இது அஷ்ட மூலக் கஷாயம் எனப்படும்.
9. வேர்க்கஷாயத்தைக் கடைசி மாதத்தில் காலை, மாலை கொடுத்து வரச் சுகப்பிரசவம் ஆகும்.
அற்ற தறிந்து கடைபிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.
-குறள்.
தொடரும்
- பூஞ்சோலை...