அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! நன்றி! ...

14 June, 2011

தமிழ் மருத்துவம் (சித்தா) - 8









மிளகு
(தாவரவியல் பெயர் : Piper nigrum)

சீத சுரம் பாண்டு சிலேத்துமம் கிராணி குன்மம்
வாதம் அருசி பித்தம் மாமூலம் _ ஓதுசந்நி
யாசம் அபஸ்மாரம் அடன் மேகம் காசம் இவை
நாசம் கரி மிளகினால்.

கூர்முனையுடைய அகன்ற அழுத்தமான இலையினையும் உருண்டை வடிவப் பழக் கொத்தினையும் உடைய ஏறு கொடி. பழம், கொடி ஆகியவை மருத்துவப் பயனுடையது.

மிளகு, வால்மிளகு, வெள்ளை மிளகு என மூன்று வகைப்படும்.

1. 3 கிராம் மிளகைப் பொடித்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 125 மில்லி லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி குடித்து வரக் காய்ச்சல், செரியாமை, வயிற்றுப் பொருமல் ஆகியவை தீரும். மருந்து வீரியம் தணியும். ( மருந்து வீறு என்பது கடும் மருந்துகளை உட்கொள்வதால் வாய், வயிறு வெந்துபோகுதல்)

2. அரை கிராம் மிளகுப் பொடியுடன் 1 கிராம் வெல்லம் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வர பீனிசம், தலை பாரம், தலைவலி தீரும்.

3. மிளகு 4 கிராம், பெருங்காயம் 1 கிராம், கழற்சிப்பருப்பு 10 கிராம் இவற்றைப் பொடித்துத் தேனில் அரைத்து 200 மி.கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கி வயதுக்கு ஏற்ப 1 அல்லது 2 மாத்திரை காலை, மாலை சாப்பிட்டு வர காய்ச்சல், குளிர் காய்ச்சல், யானைக்கால் காய்ச்சல் ஆகியவை தீரும்.

4. மிளகைப் புளித்த மோரில் ஊற வைத்து உலர்த்தி இள வறுப்பாய் வறுத்துப் பொடித்து அரை கிராம் பொடியை தேனில் குழைத்து காலை, மாலை கொடுத்துவர வாயு, கபம், இருமல், செரியாமை, மிகு ஏப்பம் ஆகியவை நீங்கி பசி தீரும்.

5. மிளகு 75 கிராம், சீரகம் 50 கிராம், அருகம்புல் சமூலம் 100 கிராம் ( சமூலம் = மூலிகையின் அனைத்துப் பகுதியும் பூ, காய், இலை,தண்டு, வேர்) அனைத்தையும் இடித்து ஒரு லிட்டர் நல்லெண்ணையில் போட்டு 15 நாட்கள் கடும் வெயிலில் வைத்து 45,90, 150 நாட்கள் தொடர்ந்து தலைக்குத் தேய்த்து வர கண் நோய் தீரும்.

6. மிளகு 5 கிராம், அருகம் வேர் 30 கிராம், சிறுகீரை வேர் 5 கிராம், சீரகம் 5 கிராம் அனைத்தையும் ஒரு லிட்டர் நீரிலிட்டுக் காய்ச்சி கால் லிட்டராக சுருக்கி பால், கற்கண்டு கலந்து பருக மருந்து வீறு தணியும்.

7. மிளகு 10 கிராம், அவுரி வேர் 20 கிராம், சேர்த்து அரைத்து சுண்டைக்காய் அளவு காலை, மாலை கொடுக்க எட்டி, வாமை, கலப்பைக் கிழங்கு நாவி, அலரி வேர் ஆகியவற்றின் நஞ்சு தீரும்.

8. 6 மிளகுடன் 10 கிராம் இஞ்சி, 3 வெள்ளருகம்பூ இவற்றை இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி காலை, மாலை குடித்துவர ஆஸ்துமா, இரைப்பு, நுரையீரல் சளி, மூக்கடைப்பு, இருமல் ஆகியவை தீரும்.

9. மிளகு 6, சுக்கு 10 கிராம், சீரகம் 35 கிராம், பூண்டு பல் 3, ஓமம் 10, இந்துப்பு 4 கிராம் இவற்றை மண்சட்டியில் வறுத்து 50 கிராம் வேப்பங் கொழுந்துடன் மையாய் அரைத்து 50 மி.லி. வெந்நீரில் கலந்து வடிகட்டி குழந்தைகளுக்கு அரைச்சங்கு தாய்ப்பாலில் கலந்து 2 முதல் 4 வேளை கொடுக்க வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

10. மிளகுடன் ஒரு கைப்பிடி இலந்தை இலை, பூண்டு 4 பல் அரைத்து மாதவிலக்கான முதல் 2 நாட்கள் கொடுத்து வர கருப்பைக் குற்றங்கள் நீங்கும்.

11. 2 கிராம் மிளகுடன் 10 கிராம் கரிசாலை இலையை சேர்த்து வெண்ணெய் போல அரைத்து மோரில் கலக்கி காலை, மாலை சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை, சோகை முதலியவை தீரும்.

12. 10 கிராம் மிளகுடன் சமஅளவு சுக்கு, திப்பிலி, இரண்டு கிராம் இலவங்கம் சேர்த்து அத்துடன் ஆடாதொடை வேர் 80 கிராம், முசுமுசுக்கை வேர் 120 கிராம் சேர்த்து பொடியாக்கி 5 அரிசி எடை கருப்பு வெற்றிலையுடன் சாப்பிட்டு பால் அருந்தி வர சுவாச உறுப்பு துப்புரவாகும். உறைந்த சளி வெளியேறும். இருமல், என்புருக்கி தீரும்.

13. மிளகு 10 மூக்கிரட்டை வேர் ஒரு பிடி, அருகம்புல் ஒரு பிடி, கீழாநெல்லி ஒரு பிடி இவைகளை ஒன்றாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி தினம் இரண்டு வேளை குடித்து வர காமாலை, நீர் ஏற்றம், சோகை, வீக்கம், நீர்க்கட்டு தீரும்.

14. மிளகையும், துளசியையும் தனித்தனியாக வறுத்துப் பொடி செய்து வெல்லப் பாகில் பொடியைச் சேர்த்து சுண்டைக்காய் அளவு உருட்டி சுத்தமான பாத்திரத்தில் வைத்துக்கொண்டு வாயில் போட்டு நன்றாக சப்பி சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் மூன்று நாட்களுக்கு சாப்பிட தீராத விக்கல் நிற்கும். உப்பு, புளி, காரம் நீக்க வேண்டும்.

15. மிளகுத் தூளுடன் திப்பிலித் தூள் சிறிது சேர்த்து அரிசி வேகவைத்த நீருடன் கலந்து கொடுக்க கல்லீரல், மண்ணீரல், நல்ல முறையில் இயங்கும். இரத்தம் அதிகரிக்கும். பசி உண்டாக்கும்.

16. மிளகு மற்றும் ஏலக்காய் விதைகளை பொடி செய்து கொடுக்க கருத்தரித்த தாய்மார்களுக்கு சளி சம்மந்தமான வியாதி குணமாகும்.

17. மிளகு, கசகசா, பாதாம்பருப்பு, கொப்பரைத் தேங்காய், சீரகம் இவரை பசும்பாலில் அரைத்துக் காய்ச்சி நறுமணத்துடன் இறக்கித் தலைக்குத் தேய்த்து முழுகி வர யாதொரு நோயும் அணுகாது.

18. திரிகடுகு (சுக்கு, மிளகு, திப்பிலி) பொடி செய்து சிறிது உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர நல்ல பசி உண்டாகும். சீரகம், ஏலமும் சேர்த்துக் கொள்ளலாம்.

19. திரிகடுகுப் பொடியை திரிகடி அளவு (மூன்று விரல் அளவு) சூடான வெந்நீருடன் சாப்பிட்டால் சில நிமிடங்களில் தலைவலி நீங்கும்.

20. ஒன்பது மிளகை அம்மியில் வைத்து எலுமிச்சை சாறு விட்டு மை போல அரைத்து நெற்றியில் பற்றுப் போட தலைவலி உடனே குணமாகும்.

21. மிளகு, சந்தனம், கற்பூரம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து சொறி, சிரங்குகளின் மேல் பூச குணமாகும்.

22. மிளகுத்தூள் 1 மி.கிராம், சிறிய வெங்காயம் இரண்டு, அரை கிராம் உப்பு இம்மூன்றையும் நன்றாக அரைத்து புழு வெட்டு உள்ள இடத்தில் தடவி வர புழு வெட்டு நிற்கும்.

23. 10 மிளகுடன் 3 ஆடாதொடை இலையை சேர்த்து மை போல அரைத்து உருட்டி நாள்தோறும் காலையில் விழுங்க வேண்டும். இவ்வாறு நாற்பத்தைந்து
நாட்கள் சாப்பிட நாள்பட்ட இருமல் காணாமல் போகும்.

24. புரசு விதை, மிளகு வகைக்கு 3 கிராம், வெள்ளைப் பூண்டு 6 கிராம் அரைத்து கொட்டைப் பாக்களவு மூன்று நாள் காலை சூரிய உதயத்தில் சாப்பிட விரை வீக்கம் நீங்கும்.

25. மிளகு, உப்பு, இலவங்கம், கற்பூரம் இந்நான்கையும் இடித்துப் பொடி செய்து வஸ்திர காயம் செய்து வைத்துக் கொண்டு பல் துலக்கி வெந்நீரில் வாய் கொப்பளிக்க பல் நோய் தீரும்.

பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும்
பயமில்லாமல் சாப்பிடலாம்.
                                                                    தொடரும்
- பூஞ்சோலை.





















03 June, 2011

மலர்ந்தேன் நான்............(ஜுன் இரண்டாம் நாள்)


இறை அருளால்
உருவாக்கப்பட்ட
மானிட பிறவிகளில்
நானும் இவ்வுலகை
கண்ட நாள்.........
நானறியா மொழிகளில்
பேசிய நாள்....
நான்கு காலோடு
நடனமாடிய
நல்ல நாள்....
கபடம் அறியா
காடாற்சத்தில்-இளம்
கன்றான நாள்....
காட்சிகள் அறியாது
கலைக் கூடத்தில்-காவியத்தை
கண்ட நாள்.....
சுதந்திர தேவியோடு
சுகமாய்ச்
சுற்றி வந்த நாள்........
இனி காணாத அந்த
இனிய நாள் -இன்று
என் நினைவுகளில்......


உங்கள் நண்பன்
பாலா.........

இறை படைப்பில்
இவனும் ஓர் துளி
கவிதையாய்..........

குமாரசுவாமி பாலசுப்ரமணியன்

28 May, 2011

காதல்


உணர்வை உருக்கி
மூளையை கசக்கி
இரத்தத்தின் வாயிலாக
உயிரை கரைத்து
மனித நெஞ்சுக்குள்
மூன்றெழுத்தாய் படைத்துவிட்டான்
இறைவன்........................................
"காதல்"

உங்கள் நண்பன்
பாலா

நீ இல்லாத உலகம்



நித்தம் ஒரு யுகம்
சத்தமில்லாத பகல்
சந்தமில்லாத பாடல்
சொந்தமில்லா வாழ்க்கை
சொர்க்கமில்லா பூமி
சுவாசமில்லா உயிர்
ரசிக்காத மனம்
ருசிக்காத உணவு
சிறகில்லா பறவை
அர்த்தமில்லா கவிதை
அழகில்லாத முகங்கள்
அருவருப்பாய் சுரங்கள்
ஆறுதலாய் நட்பு-இங்கு
புரியாமல் நான்...............
அறியாமல் நீ-ஆனால்
இரவில் மறவாமல்-திறந்தது
சொர்க்கத்தின் கதவுகள்
உன் வரவால்..........
நினைவுகளுடன்.... உங்கள் நண்பன்
                                                   பாலா

10 May, 2011

தமிழ் மருத்துவம் (சித்தா) - 7












மூலிகைகளைப் பத்தி படிச்சி கொஞ்சம் போரடிச்சிருக்கும். அதனால தினமும் நாம சமையல்ல பயன் படுத்தற கடுகு, சீரகம், பட்ட சோம்பு, இஞ்சி, பூண்டு போன்ற மசாலா அயிட்டங்களோட மருத்துவ குணங்களைப் பார்க்கலாம்.



கடுகு
(தாவரவியல் பெயர் :Brassica juncea)

இடிகாச நாசிக்கு ரீளைகபம் பித்தங்


கடிவாத சீதங் கடுப்போ-குடலிற்

படுகோட்டு நோயென்னும் பங்கிவைக ளைப்புண்

கடுகோட்டு மேன்மருந்த காண்.

மந்தமயக் கம்வாதம் வாய்நீர்ச் சுழற்றலறு

முந்து சுகப்பிரச வங்களுண்டா-மிந்துஙதன்

மானே கிராணிகுன்ம மாறுமுத் தோடமும்போம்

தானே கடுகிற்குத் தான்.

கடுகுன்னு சொன்னதுமே மொதல்ல நமக்கு நெனப்பு வர்றது தாளிப்பு தான். ஒரு சமையல் முழுமையடையறது தாளிப்புலதான் இருக்கு. இந்த கடுகுல ரெண்டு வகை இருக்கு. கருங்கடுகு இத செங்கடுகுன்னும் சொல்லுவாங்க. இன்னொண்ணு வெண்கடுகு. இது நாட்டு மருந்துக் கடைல கிடைக்கும்.
வாந்தி உண்டாக்கறது, வெப்பத்த அதிகப்படுத்தறது, சிறுநீர் பெருக்குதல், நாம சாப்பிடற உணவுப்பொருட்கள வேகமா செரிக்க வைக்கறது போன்ற மருத்துவ குணங்கள் கடுகுக்கு இருக்கு.
1. பூச்சிமருந்து குடிச்சவுங்க, தூக்க மாத்திரை சாப்பிட்டவுங்களுக்கு 2 கிராம் கடுகை நைசா அரைச்சு தண்ணில கலக்கி குடிக்க கொடுத்தா உடனடியா வாந்தி எடுத்து விஷம் வெளியேறும்.
2. கடுகோட சமஅளவு முருங்கப்பட்டை சேர்த்து அரைச்சு பத்துப்போட கைகால் குடைச்சல், மூட்டு வலி, நரம்புப் பிடிப்பு இதெல்லாம் தீரும். எரிச்சல் இருந்தா உடனே கழுவிரணும்.
3. 10 கிராம் கடுகைப் பவுடராக்கி கால் லிட்டர் தண்ணில ஊறவச்சு வடிகட்டிக் குடிச்சா விக்கல் உடனே நிக்கும்.
4. கடுகு எண்ணெயோட 5 மடங்கு விளக்கெண்ணெய் கலந்து கொஞ்சம் கற்பூரம் சேர்த்து மூட்டு வலி, மார்புவலிக்குத் தேய்க்க வலி குறையும்.
5. கடுகைப் பொடிச்சு அரிசி மாவுல கலந்து பிசைஞ்சு களிபோல வேகவச்சு துணில தடவி வலியுள்ள இடங்கள்ல போட வயித்துவலி, வாதவலி, கெண்ட வலி எல்லா வலியும் தீரும்.

சீரகம்
(தாவரவியல் பெயர் : Cuminum cyminum)
எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம்
கட்டுத்தேனில் கலந்துண்ன
விக்கலும் விட்டுப்போகுமே
விடாவிடில் நான் தேரனும் அல்லவே
இதுவும் நாம தினமும் சமையலுக்குப் பயன்படுத்தற ஒரு கடைச்சரக்குதான். சீரகம் நம்ம வயித்துல இருக்குற வாயுவ நீக்கி, செரிமானத்த அதிகப்படுத்தி, சிறுநீர்பெருக்கி, திசுக்களை இருகச் செய்யறது, மாதவிடையத் தூண்டுறது போன்ற மருத்துவக் குணங்களை உடையது.
1. சீரகத்த நல்லா காயவச்சு பவுடராக்கி 1 கிராம் அளவு எடுத்துத் தேன் அல்லது பாலில் காலை, மாலை சாப்பிட பித்தம், வாயு, உதிரச்சிக்கல், சீதக்கழிச்சல், ஆகியவை தீரும்.
2. சீரகத்த சுத்தம் செஞ்சு 50 கிராம் எடுத்து காயவச்சுப் பொடி செஞ்சு நாட்டுச் சக்கர கலந்து, விடாம தொடர்ந்து நாள்தோறும் சாப்பிட தேகம் வன்மை பெறும்.
3. பொடித்த சீரகம் ஒரு ஸ்பூன் கற்கண்டு தூள் சேர்த்து சாப்பிட்டா இருமல் தீரும்.
4. சீரகத்த கரிசாலைச் சாறில் ஊறப் போட்டு உலர்த்தின பொடி 5 கிராம், சர்க்கரை 10 கிராம், சுக்குப்பொடி 5 கிராம் இந்த மூன்று பொடிகளையும் கலந்து தினமிருவேளை உட்கொள்ள காமாலை, வாயு, உட்சுரம் தீரும்.
5. தேவையான அளவு சுத்தம் செஞ்ச சீரகத்த எலுமிச்சைச்சாறு, இஞ்சிச்சாறு, நெல்லிச்சாறு ஆகியவை ஒவ்வொன்னுலையும் மும்மூணு முறை ஊறவச்சு உலர்த்திப் பொடி செஞ்சு அரைத்தேக்கரண்டி காலை, மாலை சாப்பிட்டு வர செரியாமை, சுவையின்மை, பித்தமயக்கம், கண்ணெரிச்சல், வயிற்றுவலி, மூலக்கொதிப்பு, உடல் வெப்பம் ஆகியவை தீரும்.
6. சீரகத்த அரச்சுப் பத்துபோட்டா மார்பக வீக்கம், விரைவீக்கம் ஆகியவை குறையும். எரிச்சல் வலியுள்ள இடங்கள்ல தடவ குணமாகும்.

வெந்தயம்
(தாவரவியல் பெயர் : Trigonella foenum graecum)
பிள்ளைக் கணக்காய்ச்சல் பேதி சீதக்கழிச்சல்
தொல்லை செய்யும் மேகம் தொலையும் காண் _ உள்ளபடி
வெச்சென்ற மேனி மிகவும் குளிர்ச்சியதாம்
அச்சம் இலை வெந்தயத்திற்காய்.
இது கீரை வகையைச் சேர்ந்தது. இலைகளும் விதைகளும் மருத்துவப் பயனுள்ளது. வெந்தயத்த காரக்குழம்பு, ஊறுகாய்க்கு அவசியம் பயன் படுத்துவாங்க. கீரையக் கூட்டா செஞ்சு சாப்பிட்டா உடலுக்கு நல்ல குளிர்ச்சியத் தரும்.
1. இலைகளை தணலில் வதக்கி இளஞ்சூட்டுல பத்துப் போட வீக்கம் தீப்புண் குணமாகும்.
2. வெந்தயத்த நல்லா காயவச்சுப் பொடியாக்கி காலை மாலை ஒரு தேக்கரண்டி தொடர்ந்து சாப்பிட்டு வர மதுமேகம்(சர்க்கரை நோய்) குறையும்.
3. வெந்தயம் 20 கிராம் எடுத்து 350 கிராம் பச்சரிசியுடன் சேர்த்து சமைச்சு சாப்பிட இரத்தம் ஊறும்.
4. கஞ்சியில் வெந்தயத்த சேர்த்துக் காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.
5. வெந்தயத்த ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊறவச்சு நல்லா அரைச்சு தலைக்கு தேச்சு குளிக்க முடி உதிராம நல்லா வளரும்.
6. 5 கிராம் வெந்தயத்த நல்லா வேகவச்சுக் கடஞ்சு கொஞ்சம் தேன் சேர்த்துச் சாப்பிட தாய்ப்பால் பெருகும்.
7. வெந்தயம், கோதுமை ரெண்டும் சேர்த்து வறுத்து கஞ்சியாக்கி சாப்பிட உடல் வெப்பம் நீங்கும்.
8. வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் சமமா எடுத்து நெய் விட்டு வறுத்துப் பொடியாக்கி சாப்பிட்டில் கலந்து சாப்பிட வயிற்றுவலி, பொருமல், ஈரல வீக்கம் குறையும்.
9. வெந்தயம், வாதுமைப் பருப்பு, கசகசா, உடைத்த கோதுமை, நெய், பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட உடல் வன்மையாவும், வலுவாவும் இருக்கும். இடுப்பு வலி தீரும்.
10. வெந்தயத்த சீமை அத்திப்பழம் சேர்த்து அரைச்சு கட்டிகளுக்குப் பத்துபோட்டா கட்டி உடையும். படைகளுக்கும் பூசலாம்.
11. வெந்தயத்தையும் அரைச்சுத் தீப்புண்கள் மேல பூச எரிச்சல் குறையும்.

சோம்பு
(தாவரவியல் பெயர் : Pimpinella Anisum)
இதனை பெருஞ்சீரகம்னும் சொல்வாங்க. சோம்பு செரிமான சக்திய அதிகப்படுத்தும்.
1. சோம்பை இளவறுப்பா வறுத்து பொடித்து 2 கிராம் எடையளவு சர்க்கரை கலந்து, தினம் இருவேளை சாப்பிட வயிற்றுவலி, வயிற்று உப்புசம், செரியாமை, இருமல், இரைப்பு நோய் ஆகியவை குறையும்.
2. சோம்புக் கஷாயம் 15 முதல் 20 மி.லி அளவு குழந்தைகளுக்குக் கொடுக்க கழிச்சல், வயிற்றுப் பொருமல் நீங்கும்.
3. சோம்பு, சீரகம், மிளகு சம அளவு சேர்த்து பொடி செய்து பொடியை தேனுடன் சாப்பிட குரல் கம்மல், இரைப்பு, மூக்கில் நீர் பாய்தல் போன்றவை நீங்கும்.
4. சோம்பு பசியைத் தூண்டும்.
5. சோம்பு, மல்லி இரண்டையும் இள வறுப்பாக வறுத்து, ஒன்றிரண்டாக பொடித்து நாலு மடங்கு நீர் விட்டுக் காய்ச்சி, வடிகட்டி, இரண்டு தேக்கரண்டி வெண்ணெய் கலந்து குடிக்க கர்ப்பிணிப் பெண்களின் சூட்டு வலி தீரும்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
-குறள்
தொடரும்
- பூஞ்சோலை